3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான ஆற்றலை பெற்றுள்ளது இந்தியா – பிரதமர் மோடி..!

குஜராத் அரசு வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி இன்று, காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

வரும் ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாகத் திகழும் என்றும் உலக நாடுகளின் நிபுணர்கள் நம்புவதாக பிரதமர் கூறினார். இந்தியாவில் இந்த புரட்சிக்கு இளைஞர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவித்தார். குஜராத் மாநிலம் தகோதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ரயில் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலைக் கட்டப்பட்டு வருவதாகக் கூறிய அவர், எதிர்காலத்தில் செமி-கண்டக்டர்களின் மிகப்பெரிய கேந்திரமாகவும் அமையும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் புதிய சாத்தியங்களைச் செயல்படுத்த பெருமளவில் திறன்மிக்க மனித வளத்தை தயார்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், உலகில் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான ஆற்றலை இந்தியா பெற்றுள்ளது என்றார்.

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 திறன் இந்தியா சர்வதேச மையங்கள் உருவாக்கப்படும் என்றும், இவற்றில் புதுயுக தொழில்நுட்பத்தின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் விஸ்வகர்மா திட்டம் பற்றி பேசிய அவர், இதன் மூலம் கைவினைக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து சிறிய அளவிலான வணிகத்திற்கு உலக சந்தை கிடைப்பதற்கு உதவி செய்யப்படும் என்றார்.

அரசுப்பணி மட்டுமே இளைஞர்களின் இலக்காக இருந்தால் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி தடைபட்டுவிடும் என்றும் பிரதமர் எச்சரித்தார். அவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவர்களை இங்கே அழைத்து வந்துள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், தங்களின் வாழ்க்கை முழுவதும் முன்னேறி செல்வதற்கு உதவுகின்ற புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

உங்களுடைய பணி எதுவாக இருப்பினும் உங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ள சிறப்புக் கவனம் செலுத்துங்கள். அரசு ஊழியர் ஒவ்வொருவரும் சிறந்த பயிற்சியை பெற வேண்டும் என்பதே எங்களின் முயற்சி என்பதுடன், பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.