தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறது- பிரதமர் மோடி.!

சீனா: தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 % வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை கைவிட இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு விவாகரத்திற்கு மத்தியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடி தொடர்பாக புடினுடன் மோடி ஆலோசிப்பதாக தகவல் வெளியானது. மேலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

பின்னர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,அமைதிக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். தீவிரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வோரையும் எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை இந்தியா வலியுறுத்துகிறது; குரல் கொடுக்கிறது. பயங்கரவாதம் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, மனிதகுலத்திற்கே சவாலாக உள்ளது. பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மையே எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். இந்த பாதையில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய சவால்களாகவே உள்ளன.

பயங்கரவாதத்தால் எந்த நாடும், எந்த சமூகமும், மக்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. 4 தசாப்தங்களாக பயங்கரவாதத்தின் தாக்கத்தை இந்தியா சுமந்து வருகிறது. சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் துயர சம்பவத்தின் போது எங்களுடன் நின்ற நட்பு நாடுகளுக்கு நன்றி.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா சாதகமான பங்கு வகித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் SCO என்பது S- பாதுகாப்பு, C-இணைப்பு, O- வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி; வரவேற்பு அளித்த சீன அதிபருக்கு நன்றி. இவ்வாறு உரையாற்றினார்.