ஹாராரே: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் சதம் விளாசி பின் 150 ரன்களையும் கடந்தார். அவரது ஆட்டத்தை பார்த்த இங்கிலாந்து வீரர்கள் 17வது ஓவரின் முடிவிலேயே மைதானத்தில் திகைத்து நின்றனர்.
ஜிம்பாப்வேயின் ஹாராரே நகரில் நடைபெற்ற 2026 அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து வந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
போட்டியின் திருப்புமுனையாக 17வது ஓவர் அமைந்தது. அதுவரை நிதானமாகவும், இடைஇடையே அதிரடியாகவும் ஆடிவந்த வைபவ் சூர்யவன்ஷி, அந்த ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் வீசிய அந்த ஓவரில் அடுத்தடுத்து 3 இமாலய சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் வைபவ் விளாசினார். அந்த ஒரே ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 22 ரன்கள் கிடைத்தன.வைபவ் சூர்யவன்ஷி அடித்த அடியைப் பார்த்து இங்கிலாந்து கேப்டன் தாமஸ் ரீவ் மற்றும் களத்திலிருந்த வீரர்கள் உறைந்து போயினர். அந்த ஓவர் முடிந்ததும் இங்கிலாந்து வீரர்கள் முகத்தில் தோல்வி பயம் தெரிய ஆரம்பித்தது. கேப்டன் தாமஸ் ரீவ் உடனடியாக ஓடிச் சென்று தனது அணியின் முக்கிய வீரருடன் மைதானத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார். வைபவ் சூர்யவன்ஷியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் இங்கிலாந்து அணி நிலைகுலைந்து போனது அந்த ஆலோசனையிலேயே தெரிந்தது. அந்த ஓவரின் முடிவில் 96 ரன்களில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி, அடுத்த சில நிமிடங்களிலேயே தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். வெறும் 55 பந்துகளில் அவர் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.









