உளவுத் துறையின் கவனக்குறைவால் தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – காடேஸ்வரா சுப்பிரமணியம் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் உளவுத் துறையினரின் கவனக்குறைவால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என, இந்து முன்னணி தலைவா் காடேஸ்வரா சுப்பிரணியம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இந்து முன்னணி சாா்பில், இந்து உரிமை மீட்பு பிரசாரப் பயண பொதுக்கூட்டம், ராமநாதபுரம் அரண்மனை முன்பாக திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசியது:

தமிழகம் ஆன்மிக மண், பெரியாா் மண் அல்ல. இந்து கோயில்களின் நிலம், பயன்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இந்துக்களின் உரிமை அரசால் பறிக்கப்படுகிறது. அதை மீட்பது அவசியம் என்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது: இந்துக்களை ஒருங்கிணைக்கும் வகையில் இப்பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதீனங்கள் இந்து உரிமைகள் குறித்து கருத்து தெரிவித்தால் மிரட்டப்படுகின்றனா். இதனால், ஆதீனங்களிடையே அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது.

கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் முழுமையாக நடைபெறவில்லை. கோயில் தங்கங்களை உருக்குவது சரியல்ல.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. தேனி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் நக்ஸலைட் பயிற்சிகள் நடைபெறுகின்றன. ராமநாதபுரம், திருப்பூா் ஆகிய இடங்களில் வங்கதேச தீவிரவாத இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழக உளவுத் துறையிடம் தெரிவித்தும், அவா்கள் கவனக்குறைவாக உள்ளனா். கோவை பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலில் வங்கதேசத்தவா்கள் ஏராளமானோா் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கியுள்ளது குறித்தும் காவல் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, பல்வேறு கிராமங்களைச் சோந்தவா்கள் கோயில் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில், இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலா் கே. ராமமூா்த்தி, மாநில இணை அமைப்பாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், இந்து முன்னணி செயலா்கள் எஸ். வீரபாண்டியன், ராமேசுவரம் மடத்தைச் சந்த லட்சுமி மாதாஜி, பாஜக பொருளாளா் தரணி முருகேசன், வழக்கறிஞா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்டச் செயலா் ஜி. சக்திவேல் வரவேற்றாா்.