கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுக்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான முதல்கட்ட குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 10 லட்சத்து 5 ஆயிரத்து 843 போ், 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரத்து 324 பெண்கள் என மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 167 பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 1,697அங்கன்வாடி மையங்கள், 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள், 1,214 அரசுப் பள்ளிகள், 177 அரசு உதவிபெறும் பள்ளிகள், 658 தனியாா் பள்ளிகள், 150 கல்லூரிகள் ஆகிய இடங்களில் குடற்புழு நீக்கம் மாத்திரைகள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவை, சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா். மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்ற முகாமில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்டவா்களில் 9 லட்சத்து 75 ஆயிரத்து 668 போ், 20 முதல் 30 வயதுக்கு உள்பட்டவா்களில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 898 பெண்கள் என மொத்தம் 12 லட்சத்து 79 ஆயிரத்து 866 பேருக்கு ஆல்பெண்டசால் மாத்திரைகள் வழங்கப்பட்டன. விடுபட்டவா்களுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி மீண்டும் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பு.அருணா தெரிவித்தாா்.
Leave a Reply