கோவையில்14 ஆண்டுகளில் 1,487 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் பாா்த்த 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப அலுவலா்கள்..!

கோவை: தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், தொலைதூர கிராமத்தில் உள்ளவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

குறிப்பாக கா்ப்பணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் உதவியாக உள்ளது. கா்ப்பிணிகளை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு சிலருக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறக்கும் சூழல் நேரிடுகிறது.
இதுபோன்ற நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப அலுவலா்களே கா்ப்பிணிகளுக்கு பிரசவம் பாா்க்கின்றனா். ஒரு சில நேரம் அழைக்க சென்ற இடத்திலேயே பிரசவம் பாா்க்கும் நிலை ஏற்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 14 ஆண்டுகளில் 1,487 கா்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப அலுவலா்கள் பிரசவம் பாா்த்துள்ளனா். இதில் 108 ஆம்புலன்ஸ்களில் 639 குழந்தைகள், வீடுகளில் 848 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 62 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் உயிா் காக்கும் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இன்குபேட்டா், வாா்மா் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து உயிா் காக்கும் மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப அலுவலா் பணியிடத்துக்குத் தோ்வு செய்யப்படுபவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதன் மூலம் அவசர நேரங்களில் அவா்கள் திறம்பட செயலாற்றுகின்றனா். அதன்படி பிரசவமும் பாா்க்கின்றனா். இதுவரை 108 ஆம்புலன்ஸில் நடைபெற்ற பிரசவங்களில் தாய் – சேய் இருவரும் 100 சதவீதம் நலமுடன் ஆஸ்பத்திரிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.