கோவையில் 31ம் தேதி கடைகளை அடைக்குமாறு மிரட்டினால் கைது- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை..!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முன் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க .சார்பில் வருகிற 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜாதி, மதம். பாரா மல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர் .கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டி தொடர்ந்து முழு அடைப்பு போராட்ட அறிவிப்பு மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- வருகிற 31ஆம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்தையொட்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்திற்கும் எந்தவித குறைபாடு நேராமல் இருக்க காவல்துறையின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழு அடைப்பு என்ற பெயரில் யாராவது பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தாலோ அல்லது வியாபாரிகளை கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினாலோ,அவர்கள் கைது செய்யப்படுவார்கள். சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.