உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த நாடு, ரஷ்யாவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் எதையும் வழங்கும் திட்டமில்லை என மறுத்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவிக்கையில், சீனாவின் வாங் யி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையே இன்று திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வந்தது என்றார்.
இதே கருத்தையே, ஜேர்மன் நாளேடு ஒன்றில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் குறிப்பிட்டிருந்தார். இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களமிறங்காமல் இருப்பது முக்கியமான விடயம் என்றார்.
உக்ரைன் பக்கம் சீனா நிற்கவேண்டும் என இந்த சூழலில் தாம் விரும்புவதாக குறிப்பிட்டிருந்த ஜெலென்ஸ்கி, ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே நம்புகிறேன் என்றார்.
இருப்பினும், இங்குள்ள சூழலை சீனா விரிவான ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களமிறங்கும் என்றால், உண்மையில் அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் எனவும், இதுகுறித்து சீனா புரிந்துவைத்திருக்கும் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யா மால்டோவாவில் சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி அங்குள்ள ஜனாதிபதிக்கு உளவுத் தகவலை அனுப்பியதாகவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மூன்றாம் உலகப் போர் தொடர்பில் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்த அதேநாளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு ரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
மட்டுமின்றி, 500 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள சீனா, தாங்களல்ல அமெரிக்காவே போர்க்களத்தில் ஆயுதங்களை குவித்து வருகிறது என சாடியுள்ளது.
அமைதி திரும்பவும் பேச்சுவார்த்தைக்கும் அமெரிக்கா உதவ வேண்டும், ஆயுதங்களை குவித்து போர் மூட்டும் வேலைகளில் இறங்குவது சரியான முடிவல்ல என குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply