ஆஸ்திரேலியா ஒப்பந்தம் நிறைவேற்றத்தால்… 50,000 மெட்ரிக் டன் பருத்தி இறக்குமதிக்கு அனுமதி..!

திருப்பூர்: ஆஸி., ஒப்பந்தம் நிறைவேறியுள்ள நிலையில், 2023ம் ஆண்டில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தியை, வரியில்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம், கடந்த 29ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வரியில்லாமல் இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடியும்.ஆஸி.,யில் இருந்து, வரும் 2023ம் ஆண்டில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுள்ள, 3.50 பேல் பஞ்சு இறக்குமதிக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நுாற்பாலைகளுக்கு மட்டும், மாதம் 25 லட்சம் பேல் அளவுக்கு பஞ்சு தேவைப்படும் நிலையில், முந்துவோர் மட்டுமே, வரியில்லாமல் பஞ்சு இறக்குமதி செய்ய இயலும்.கடந்த ஆண்டு ஏற்பட்ட விலை உயர்வால், இன்னும் பருத்தி மார்க்கெட்டில் இயல்புநிலை திரும்பவில்லை. தினமும், 2.50 லட்சம் பேல் வரை விற்பனைக்கு வரும் நிலைமாறி, 1.20 லட்சம் பேல் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நாளை புத்தாண்டு துவங்க நிலையில், கடந்த சில நாட்களாக, 80 ஆயிரம் பேல் அளவுக்கு மட்டுமே பஞ்சு வரத்து உள்ளது.

கடந்த வாரத்தில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 65 ஆயிரமாக இருந்து, 56 ஆயிரம் ரூபாயாக குறைந்திருந்தது. பஞ்சு வரத்து குறைந்ததால், இரண்டே நாட்களில், பஞ்சு விலை, மீண்டும் 60 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இறக்குமதி வரி நீக்கணும்!நுாற்பாலைகள் தரப்பினர் கூறுகையில், ‘கடந்த மாதம் இருந்ததை காட்டிலும், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின், நுால் கொள்முதல் அதிகரித்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மட்டும், மேலும் நுால் விலை குறையுமென, இன்னும் காத்திருக்கின்றனர். எப்படியிருந்தாலும், நுால் விலை, வரும் 2ம் தேதி தெரியவரும். நுால் தேவை ‘புக்கிங்’ ஆன பிறகே, பஞ்சு கொள்முதலில் கவனம் செலுத்துவோம். விவசாயிகளுக்கு போதிய லாபகரமான விலை கிடைப்பதால், பஞ்சு இறக்குமதி வரியை சில மாதங்கள் நீக்கினால், பஞ்சு விலை நியாயமான விலையில் நிலைநிற்கும்’ என்றனர்.