சாகும் வரை பட்டினி போராட்டம்… ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை..!

சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்புகள் செப்டம்பர் 27-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் 30 கோரிக்கைகள் முன்வைத்து, உண்ணாமல் தங்களை வருத்திக் கொண்டு போராடினாலும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது மிகமிக முக்கியமான கோரிக்கைகள்.

எல்லோரும் தங்கள் வேலையால் நாட்டுக்கு பங்களித்தாலும் ஆசிரியர்களின் பணி என்பது மிக மிக முக்கியமானது. இன்றைய மாணவர்கள்தான், அவர்களது குடும்பத்தின், நாட்டின் எதிர்காலம். மாணவர்களை திறன் மிக்கவர்களாக மாற்றும் அதாவது கல்லை மதிப்புமிக்க சிற்பமாக மாற்றும் சிற்பிகள்தான் ஆசிரியர்கள்.

ஆசிரியர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாத வாழ்க்கைச் சூழல் அமைந்தால்தான், மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்க முடியும். அவர்களது எதிர்காலத்திற்கு வழிகாட்ட முடியும். அதனால்தான், ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.

என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் குறைந்த ஊதியத்தில் உழைக்கும் அவர்களை மாநில அரசு கண்டுகொள்வதே இல்லை. அதனால், ஆயிரக்கணக்கனோர் உரிய வயதில் திருமணம் செய்யக் கூட முடியாமல் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றனர்.

அதுபோல ஒரே பணியைச் செய்யும், சம அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதும் ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மிக முக்கியமான கோரிக்கைகள் வலியுறுத்தி ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது. அரசிடம் கோரிக்கை வைத்து போராடும் எந்தத் தரப்பையும் குறிப்பாக ஆசிரியர்களை அரசுக்கு எதிரானவர்களாகப் பார்க்கக் கூடாது.

ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை முதலைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் அதுவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராடுவது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். எனவே , தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.