மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ் மகாலின் பூட்டிய அறைக்குள் இந்து கடவுள்… உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.!!

காதல் மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, அவரது நினைவாக இந்த தாஜ்மகாலை முகலாய பேரரசர் ஷாஜகான் கட்டியுள்ளார்.

நினைவு சின்னங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மகாலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது மிகவும் விலை உயர்ந்த பளிங்கு கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களில் வெள்ளை கற்கள் அதிக விலை உயர்ந்தவை. சூரிய எதிரொளிப்பு தன்மை கொண்ட இந்த கற்களால், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது.

இதனால், காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும் மாறும் தாஜ் மகால் இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

பல சிறப்புகளை கொண்ட தாஜ் மகாலில் 22 மூடிய அறைகள் உள்ளன, அதில் இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளன என கூறப்படுகிறது. அதனால், உண்மை தன்மையை கண்டறிய குழு ஒன்றை அமைத்து இந்திய தொல்லியல் துறை அதனை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், சில இந்து அமைப்புகள் மற்றும் மதிப்புமிக்க புனித துறவிகள் கூற்றுபடி, இந்த நினைவு சின்னம் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என தெரிவித்துள்ளனர். இதற்கு பல வரலாற்று ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், முகலாய பேரரசர் ஷாஜகானால் இந்த தாஜ் மகால் எழுப்பப்பட்டது என பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சிலர் தேஜோ மகாளயா என்ற தாஜ் மகால் ஆனது ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்க கூடும். அது பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களிலேயே இருக்கும் என தெரிவித்து உள்ளனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு அடுக்கு கட்டிடத்தின் மேல் மற்றும் கீழ் புறத்தில் (தோராய அடிப்படையில் 22 அறைகள்) சில அறைகள் உள்ளன, எப்போதும் அது மூடப்பட்டே உள்ளன. பி.என்.ஓக் போன்ற பல வரலாற்று சிரியர்கள் மற்றும் கோடிக்கணக்கான இந்து வழிபாட்டாளர்கள், இந்த பூட்டிய அறைகளில் கடவுள் சிவன் இருக்கிறார் என நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.