சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பவுடர் கடத்தல்- வெளிநாட்டு பயணி கைது..!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இக்பால் பாஷா (35) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். சுற்றுலா விசாவில் எத்தியோப்பியா சென்றுவிட்டு சென்னை வந்ததாக அவர் கூறினார்.

மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, உடைமைகள் மற்றும் அவரிடம் இருந்த காலணிகளில் போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவரிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கொக்கைன் மற்றும் ஹெராயின் போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இக்பால் பாஷாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.