தமிழ்நாட்டில் உள்ள கோவில் திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதை தவிர்த்து வந்தனர்.
இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கலைஞர் உயர்நீதிமன்ற கிளையில் ஏராளமான மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இந்த நிலையில், கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கடைப்பிடிக்குமாறு, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், “கோவில் விழாக்களில் ஆடல் பாடல்,கரகாட்டம், கலாச்சார நாடகம் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், அதை காவல்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து 7 நாட்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும். கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடத்தி கொள்ளலாம். ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது. பெண் கலைஞர்களுக்கு வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்த கூடாது. இரட்டை அர்த்த பாடல் நிகழ்ச்சியில் இடம்பெற கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.