கோத்தகிரி, குன்னூரில் கனமழை – கொடநாடு சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..!

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலத்த மழைக்கு ராஜாஜி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் தவித்த குழந்தைகள் உள்பட 3 பேரையும் மீட்டனர். தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வீடுகளில் மீட்பு பணியை துரித படுத்தி பணிகளை மேற்கொண்டனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சிறு, சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நேற்று பெய்த மழையில் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் பிரதான சாலையில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த சோலூர்மட்டம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை போராடி அப்புறப்படுத்தினர். இதனால் இந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.