கோவையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது. இந்த கன மழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் விழிப்புடன், 24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட
செல்வசிந்தாமணி குளத்தின் நீர்மட்டம் உயர்வின் காரணமாக செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து பெரிய குளத்திற்கு உபரி நீர் மதகுகள் வழியாக திறந்து வைக்கப்பட்டது. இதை, கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இராஜ வாய்க்காலில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தூர்வார
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுருத்தினார். கடந்த பருவ மழைக்கு செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அருகே இருந்த வீடுகளுக்குள் புகுந்த, நிலையில், கடந்த காலங்களைப்போல் இல்லாமல், அதிகாரிகள் வெள்ள நீரை கண்காணித்து வருகின்றனர்.
எனவே, சுகாதார பொதுக்குழு தலைவர் மாரிச்செல்வன், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, அதிகாரிகள் மற்றும் வட்டக்கழக செயலாளர் நா.தங்கவேலன், சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி துணைச்செயலாளர் என்.ஜே.முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.