சேலம் கோட்டத்தில் முதல் முறையாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதிக்க, பரிசோதகர்களுக்கு (டிடிஇ) கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:12674) டிக்கெட் பரிசோதகர்களுக்கு நவீன கையடக்கக்கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகளின் விவரங்களை விரைவாக சரிபார்க்க முடியும். அதோடு யார் பயணிக்கவில்லை என்ற விவரம் உடனுக்குடன் பதிவேற்றப்படும். இதனால், அவர்கள் டிக்கெட் கட்டணத்தை எவ்வித சிக்கலும் இன்றி விரைவாக பெற இயலும். மேலும், டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு, படுக்கை கிடைக்காத பயணிகளுக்கு, வரிசைப்படி வெளிப்படையாக படுக்கையை ஒதுக்க முடியும். முன்பு ரயிலில் பயணிப்போரின் டிக்கெட்டை பரிசோதிக்க டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளின் விவரங்கள் அடங்கிய நீளமான காகிதத்தில், ஒவ்வொருவரின் விவரமாக சரிபார்த்து குறித்து வந்தனர். இனிமேல், அந்த காகிதங்கள் தேவைப்படாது. இதேபோல, மற்ற ரயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கையடக்க கருவி வழங்கப்படும் என்றனர்..
Leave a Reply