சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத் மாநிலம் நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது,. குஜராத் சமாஜ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘குஜராத் ஒரு சிறந்த மாநிலம். அங்கு அதிக அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளனர். சர்தார் வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி ஆகியோர் பிறந்த மண் குஜராத். அதே போல பாரத மாதா பிறந்த மண் குஜராத். சர்தார் வல்லபாய் பட்டேல் என்பவரால் தான் இந்தியா என்ற நாடு இருக்கின்றது. இந்தியா இந்த நிலையில் இருப்பது குறித்து முன்பே கனவு கண்டவர் அவர். அதிலும் குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் நம்மோடு வருவதற்கு காரணமாக இருந்தவர் படேல் தான்.
குஜராத்தில் பூகம்பம் மற்றும் பல பிரச்னைகள் என கடினமான சூழல்கள் வந்த போது, அதனை முன்னெடுத்து சென்றவர் பிரதமர் மோடி, தற்போது இந்தியாவையும் அவ்வாறு வழிநடத்தி செல்கிறார். குஜராத் நம் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன் மாதிரியான மாநிலமாகும். குஜராத்தின் வளர்ச்சி அம்மாநிலத்திற்கு மட்டுமானது அல்ல, இந்த நாட்டின் வளர்ச்சிக்குமானது. 1900களில் இந்தியா நம்பர் ஒன் பொருளாதார முன்னேற்றம் பெற்ற நாடாக இருந்தது. குறிப்பாக அமெரிக்காவுக்கு முன்னரே இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்துள்ளது.
உலகின் முதல் நூற்றாண்டு முதல் இந்தியா தான் பொருளாதாரத்தில் முதல் நாடாக இருந்தது வந்தது. 2014-க்கு முன்பு 11 வது இடத்தில் இருந்த நமது பொருளாதாரம் தற்போது 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நம் நாடு 3 ஆம் இடத்திற்கு முன்னேறும். அண்டை நாடான சீனா, இந்தியாவை ஒரு ஏழை நாடு என்றும், வளர்ந்து வரக்கூடிய நாடு என்றும் விமர்சித்தது. ஆனால் இந்தியா இன்று வளர்ந்த நாடாக திகழ்கிறது. இந்தியா இந்துக்கள் நாடு என்று தான் கூறப்படுகிறது. இந்துக்களின் வளர்ச்சி தான் இன்று பெரிய அளவில் இருக்கின்றது. இந்தியாவை பிரதமர் மோடி மறுகட்டமைப்பு செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் வழியில் நாம் முன்னேறி செல்கிறோம். நாம் பொதுவாக எங்கிருந்து வளர்ச்சி அடைந்துள்ளோம் என பின்னால் திரும்பி பாருங்கள்! நம்மை ஒரு ராஜாவாக முன்னே வழிநடத்தி செல்கிறார் பிரதமர். சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உருவானபோது, இந்த நாடு சில நோக்கங்களுக்காக உருவாக்கப் பட்டது. இந்த நாட்டிற்கு என்றே சில விதிகள் இருந்தன. தற்போது அதனை பிரதமர் நிறைவேற்றி வருகிறார்.
இந்தியாவை பொறுத்தவரை குறைந்த அளவிலான பழங்குடியின மக்களே உள்ளனர். அவர்களுக்கான திட்டங்களை வகுத்து, 2025-க்குள் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என இந்த அரசு திட்டமிட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்களை பொறுத்தவரை மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக குஜராத், மூன்றாவது கர்நாடக மாநிலம் உள்ள நிலையில், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் உள்ளது. ஆனால், தெலங்கானா, ஹரியானா நான்காவது இடத்திற்கு வர போட்டி போட்டுக்கொண்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு 80,000 கோடி பேருக்கு உணவு கொடுத்துள்ளது.அதில் குஜராத் மாநிலத்திற்கு வெறும் 10 சதவிகிதம் மட்டுமே கிடைத்தது. இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தமிழ்நாடு 85 சதவிகிதமாகவும், குஜராத் 90 சதவிகிதமாகவும் உள்ளது. குஜராத் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது’.இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.