நெல்லையில் போய் பார்க்காம நாம் எதையும் பேசக் கூடாது: அண்ணாமலை…

கடலூர்: நெல்லையில் போய் பார்க்காம நாம் எதையும் பேசக் கூடாது, அப்படி பேசினால் அது தவறாகிவிடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூரில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென் மாவட்ட மழை வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு போர் கால நடவடிக்கையாக உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்.

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா சொல்லியிருக்கிறார்- “முப்படைகளின் உதவியை கேட்டிருக்கிறோம். சூலூரிலிருந்து விமான படையிடம் இருந்து ஹெலிகாப்டர் சர்வீஸ் கேட்டுள்ளதாகவும்” தெரிவித்திருந்தார். அது போல் களத்தில் எங்களுடைய தொண்டர்களும் தலைவர்களும் இருக்கிறார்கள். நாளை நான் திருநெல்வேலிக்கு செல்கிறேன். இரு நாட்கள் யாத்திரையை ஒத்தி வைத்துள்ளோம். அங்க போய் பார்க்காமல் என்ன பேசினாலும் அது தப்பாயிடும். அரசியலை பொருத்தமட்டில் நாம் பேசினால் உண்மை இருக்க வேண்டும்.

சென்னை பெரு வெள்ள மீட்பு பணிகளை பார்த்தோம். சரி என்பதை சரி என்றோம். தவறு என்பதை தவறு என்று சொன்னோம். பெரிய மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலியின் மைய பகுதியில் உள்ள ரயில் நிலையம் எல்லாம் மூழ்கியிருக்கிறது. 100 ஆண்டுகள் கழித்து பெய்த அடை மழை இது. இந்த நேரத்தில் விமர்சனம் எல்லாம் இல்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. மக்களுடன் களத்தில் இருக்க வேண்டும். சென்னையில் கூட வெள்ளம் வந்த போது நான் 4 நாட்களுக்கு எதையுமே பேசவில்லை. அதன் பிறகு தமிழக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளோம். எங்கள் நோக்கம் தென் மாவட்ட மக்களுக்கு உதவி செய்வதுதான். அங்கு போய் களத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்து விட்டு நான் கருத்து சொல்கிறேன்.

சென்னையை பொருத்தமட்டில் 98 சதவீதம் மழை நீர் வடிகால்களை தூர் வாரிவிட்டோம். இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்றார்கள். ஆனால் வெள்ளம் வந்துவிட்டது. பிறகு அமைச்சர் 42 சதவீதம்தான் செய்தோம் என்றார். அதை வாம் விமர்சனம் செய்தோம். ஆனால் தென் மாவட்டங்களை பொருத்தவரை அங்கு சுற்றி ஆறுகள், ஏரிகள் உள்ள இடம். இந்த மழையால் எல்லா அணைகளிலும் நீர் நிரம்பி ஊருக்குள் வந்துவிட்டது. எனவே அங்கு களத்தில் போய் நான் கருத்து சொல்கிறேன். மோடி கிச்சன் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறோம். தமிவக அரசு வேலை செய்யாவிட்டால் நாங்கள் அதை கேள்வி கேட்போம். வெள்ளம் வந்துவிட்டதால் அரசை குறை சொல்ல முடியாது.

தேங்காய் விவசாயிகள் டெல்லியில் போராடக் கூடாது, சென்னையில் தலைமைச் செயலகத்திற்கு வந்து போராட வேண்டும். தேங்காய் எண்ணெய்யை சோதனை முறையில் ரேஷனில் கொடுப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். இன்னும் அதை ஏன் செயல்படுத்தவில்லை. ஒரு குடும்பத்திற்கு ஒரு லிட்டர் தேங்காய் என கொடுத்தால் எல்லா தேங்காயையும் தமிழக அரசே வாங்கிக் கொள்ளலாம். தேங்காய் விலை 8 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதை மத்திய அரசிடம் பேசி 14.50 ரூபாய்க்கு கொண்டு சென்றோம்.

வானதி சீனிவாசன், ஒரு விவசாய குழுவினருடன் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார். அங்கிருந்து ஒரு டீம் வந்து பொள்ளாச்சியில் ஆய்வு செய்து பிறகு அந்த விலை உயர்வை கொடுத்தார்கள். விவசாயிகள் தலைமைச் செயலகத்தில் போராட்டம் செய்தால் நானும் அவர்களுடன் இணைந்து போராடுகிறேன். என்றார் அண்ணாமலை.