நாளை குரூப்-1 தோ்வு: கோவையில் 49 மையங்களில் 15081 போ் எழுதுகின்றனர்..!

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் -1 முதல் நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வினை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 81 போ் எழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிப்பதற்காக துணை கலெக்டர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், 12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக் கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். எனவே, தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வு மையத்துக்கு எளிதாக செல்லும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.