கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமமோத்சவம் என்ற பெயரில் 17 ஆவது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பிரிக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் த்ரோபால் மற்றும் வாலிபால் போட்டிகளின் இறுதி போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மண்டோவியா, முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் வீராங்கனை வைஷாலி, மாற்றுத்திறனாளி வீராங்கனை பவினா உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடன் இணைந்து கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களித்தனர். இதன் பின்னர் பெண்கள் த்ரோபால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தேவராயபுரம் அணிக்கும், முதலிடம் பிடித்த பெங்களூரு புறநகர் அணிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆடவர் வாலிபால் போட்டியில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உத்தமசோழபுரம் அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த பெங்களூர் புறநகர் அணிக்கும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் மான்சுக் மண்டோவியா, நாட்டில் விளையாட்டு துறையில் திறமையானவர்கள் நகரங்களில் பண்படுத்தப்பட்ட போதும், கிராமங்களில் இருந்து அவர்கள் கண்டறியப்படுவதாக தெரிவித்தார். எனவே திறமையானவர்களை கிராமப்புறங்களில் இருந்து கண்டறிவது மிக அவசியம் என தெரிவித்த அவர், இந்தியாவில் வருகிற 2036ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உறுதி கொண்டுள்ளதாகவும், மது உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், அதனை ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார். நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறும்போது, கிராமப்புறங்களில் உள்ள திறமையான வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து 2036ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் எனவும், நாட்டில் உள்ள கிராமங்களில் விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதற்கான அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய கணவர் ஏற்கனவே பயிற்சியாளராக இருக்கும் நிலையில் தானும் பயிற்சியாளராக வேண்டிய அவசியம் இல்லை எனவும், திறமையானவர்களை கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
செஸ் வீராங்கனை வைஷாலி பேசும்போது, இந்தியாவில் 140 கோடி மக்கள் இருக்கும் நிலையில் ஒரு சிலர் மட்டுமே செஸ் விளையாட்டில் முதலிடம் பெறுவது என்பதை விட இன்னும் அதிகப்படியான நபர்கள் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பேசிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தற்போதைக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கிராமோத்சவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதாகவும், இதில் பலர் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு விளையாட்டு துறையில் இணைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அரசுகள் மட்டுமே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நிலை மாறி, மக்களும் விளையாட்டு துறையின் மீது ஆர்வம் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், வருகிற 2047 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்களில் ஏழு லட்சத்திற்கும் அதிகமாக உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களை இந்த கிராமோத்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்வதே இலக்கு என தெரிவித்தார்.