கிணற்றில் விழுந்த ஆட்டு குட்டி: கதறி அழுத விவசாயி- பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்..!

சூலூர் அருகே கணியூர் பாரதி நகரில் வசிப்பவர் சுந்தரசாமி (வயது 45). இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென அவரது ஆடுகளில் ஒன்று அப்பகுதியில் உள்ள 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 4 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தனது ஆடு கிணற்றில் விழுந்ததால் அங்கேயே அமர்ந்து சுந்தரசாமி அழுது கொண்டு இருந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சூலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூலூர் தீயணைப்பு அலுவலர் ரகுநாதன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் விச வாயு இருக்கிறதா என சோதித்தனர். பின்னர் கயிறு கட்டி இறங்கி ஆட்டு குட்டியை பத்திரமாக மீட்டனர். ஆட்டுக்குட்டியை பெற்றுக் கொண்ட சுந்தரசாமி மகிழ்ச்சி அடைந்து தீயணைப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.