2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் த.வெ.க பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த பெண்கள் மீது மர்ம நபர்கள் கண்ணாடி பாட்டில்களை உடைத்து, அதன் துண்டுகளை கொண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்த தகவல் மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நாஞ்சில் சம்பத்தின் பேச்சை இடைமறித்து மைக் பிடித்த ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக உரையாற்றினார்.
என்ன அநியாயம் நடக்கிறது? ஒரு பெண்ணின் தோள்பட்டையில் கண்ணாடி பாட்டிலை வைத்து அடித்திருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது தி.மு.க.வின் சதித்திட்டம். கரூரில் தொடங்கினீர்கள், இன்று கண்ணாடி பாட்டிலால் அடிக்கிறீர்களா? ஸ்டாலின் சார், எல்லாவற்றையும் இதோடு நிறுத்துங்கள். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம் என்பதற்காக எங்கள் பெண்கள் மீது கை வைத்தால் சும்மா இருக்க மாட்டோம். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் இன்று இரவே கைது செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் தான் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில், த.வெ.க மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. த.வெ.க-விற்கு மக்களிடையே பெருகி வரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், வன்முறை மூலமாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாகச் செயல்படுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தவெக தலைமை தெரிவித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர் மீதான இத்தாக்குதல் முயற்சி சென்னையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.








