கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி, மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்தி என்கிற காளீஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர் . இதனை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அடையாள அணிவகுப்பு உள்ளிட்ட பணிகளை முடித்த காவல்துறையின,ர் மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க 3 நாள்கள் அனுமதி கேட்டு இருந்தனர். இந்த மனு, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கைது செய்யப்பட்டவர்களை நேரில் நீதிபதி சிந்து விசாரணை மேற்கொண்டார். மனுவை விசாரித்த நீதிபதி ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். முன்னதாக கால்களில் சுடப்பட்ட மூவரையும் சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பலரும் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.









