GCT கல்லூரி சுகாதார சீர்கேடு:உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ்!

கோவை GCT கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு : உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு – விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு !!!

கோவை, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு என தொடர்ந்து வந்த புகார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழகத்தில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இங்கு கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார் 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றப்பட்டு இந்த விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு மற்றும் வசதிகள் கவனம் செலுத்தி வருகிறது.இந்நிலையில் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதி மற்றும் மாணவிகள் விடுதிகளில் சமையல் கூடம் சரி வர பராமரிப்பு இன்றி உள்ளது. மேலும் அங்கு சுகாதாரமற்ற உணவுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதை அடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது மாணவர்கள் அங்கு சமைக்கும் உணவு சரியாக வெந்து, வேகாமலும் வழங்குவதாகவும், கடந்த மாதம் உணவில் புழு இருந்து உள்ளது. கடந்த வாரம் தக்காளி சாதம் கொடுத்தபோது அதில் பூச்சிகள் இருந்ததாகவும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் மற்றும் உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரரிடம் நோட்டீஸ் அனுப்புவதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.