அசாமில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 44 கிலோ கஞ்சா பறிமுதல் !

அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 44 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதால் ரயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து கோவை மற்றும் கேரளா வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் ,கோவை ரயில் நிலையத்துக்கு வந்து முதல் நடைமேடையில் நின்றது. உடனே அந்த ரயிலில் ஏறி கோவை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

அவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டியில் இருக்கையின் அடியில் பார்த்த போது பொட்டலங்கள் அதிகமாக குவிந்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பொட்டலங்களை பிரித்துப் பார்த்தனர். அதில் உயர்ரக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அசாம் மாநிலத்தில் இருந்து உயர்ரக கஞ்சாவை கோவைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆனால் அதை கடத்தியவர்கள் யார் ? என்பது தெரியவில்லை உடனே போலீசார் அந்த பொட்டலங்களில் இருந்து 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே காவல் துறையினர் கூறினர்.