கோவையில் ஜி 20 அமைச்சர்கள் மாநாடு – மத்திய அரசு அறிவிப்பு..!

ந்தியாவில் ஜீ 20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கு முன்பு ஜி20 நாடுகளை சேர்ந்த பல்வேறு துறை அமைச்சர்களின் மாநாடு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்னணு பரிவர்த்தனை, அறிவு சார் சொத்துரிமை போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.

இந்த நிலையில் ஜி20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் மாநாடு தமிழகத்தின் கோவையில் நடத்தப்படும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பால் அனைவரின் கவனத்தையும் தமிழகம் ஈர்த்துள்ளது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சீனா அதிபர் உடனான சந்திப்பை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி நடத்தினார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு நடத்தும் இந்த நிகழ்ச்சியால் கோவை உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.