விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை…

நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வெளிநாட்டினர் உட்பட இனி இந்தியாவில் விபத்தில் யார் காயமடைந்தாலும், அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். நம் நாட்டில் வருடந்தோறும் சாலை விபத்துகளால் பல லட்சம் உயிர்கள் பிரிகின்றன. இதில் பெரும்பாலான மரணங்கள் விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் உரியச் சிகிச்சை கிடைக்காததால் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க மத்திய அரசு ‘ரொக்கமில்லாச் சிகிச்சை’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. விபத்தில் சிக்கியவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது எந்த ஊரில் விபத்து நடந்தாலும், அருகில் உள்ள மருத்துவமனையில் பணம் செலுத்தாமலேயே உடனடிச் சிகிச்சையைப் பெறுவதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. இந்தத் திட்டம் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் பொருந்தும்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். குறிப்பாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை அவசரச் சிகிச்சைக்கான செலவை அரசாங்கமே ஏற்கும். விபத்து நடந்த முதல் 48 மணிநேரம் அல்லது விபத்து நடந்த உடனிருந்து சிகிச்சை நிலைபெறும் வரை ஆகும் செலவுகள் இதில் அடங்கும். இந்தத் தொகையை நோயாளி செலுத்தத் தேவையில்லை; மருத்துவமனைகள் நேரடியாகத் தேசிய சுகாதார ஆணையத்திடம்இருந்து பெற்றுக்கொள்ளும். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் விபத்தில் சிக்கியவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மறுக்க முடியாது. விபத்து நடந்த நபரிடம் இன்சூரன்ஸ் இருக்கிறதா அல்லது பணம் இருக்கிறதா என்று பார்க்காமல் சிகிச்சையைத் தொடங்குவதே இத்திட்டத்தின் அடிப்படை விதி. விபத்து நடந்தவுடன், அந்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், ஒரு பிரத்யேக மென்பொருள் மூலம் விபத்து குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படும். உடனடியாக அந்த நபருக்கான சிகிச்சை நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்படும். ஒருவேளைச் சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சத்திற்கு மேல் செலவானால், அந்த நபர் தனது சொந்த மருத்துவக் காப்பீடு அல்லது ஆயுஷ்மான் பாரத் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.