என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் தான் – சீமான் ஆவேச பேச்சு..!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான், “பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது தேர்தல் அரசியல். ஆகச் சிறந்த கல்வியை தரமாக, சமமாக, இலவசமாக கொடுப்பது மக்கள் அரசியல்.

மாதம் ஆயிரம் ரூபாயை மகளிருக்கு தந்துவிட்டு, 3,000 ரூபாயை தண்ணீருக்கு செலவழிக்கும் நிலையை மாற்றி, தூய குடிநீரை இலவசமாக விநியோகம் செய்வது மக்கள் நலன் சார்ந்த அரசியல். காசு கொடுத்து ஓட்டை வாங்குவது தேர்தல் அரசியல்.. ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டேன். உங்களுக்காக உழைப்போம் என்று சொல்லி ஓட்டு கேட்பதே மக்கள் அரசியல்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வளர்ச்சி வளர்ச்சி என்று கட்டமைப்பது எல்லாம் வெறும் வார்த்தையில் தான் என்று குறிப்பிட்ட சீமான், வளர்ச்சி அடைந்த மாநிலத்தில் எதற்காக இலவச அரிசி? எதற்காக குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய்? எதற்காக வாக்குக்கு பணம் தர வேண்டும்? பொங்கல் பண்டிகையின் போது மட்டும் 650 கோடி ரூபாய்க்கு குடிக்கும் மக்களுக்கு, படம் பார்க்க செலவு செய்யும் மக்களுக்கு எதற்காக இலவசம்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்தான். இலவசம் என்பது வளர்ச்சித் திட்டமே இல்லை.. அது கொடுமையான வீழ்ச்சித் திட்டம். தன்மானத்தை இழக்க வைக்கும் திட்டம். மானத்திற்காக உயிரை விட்ட தமிழ் மக்களை தன்மானத்திற்காக கையேந்த வைக்கும் திட்டம்.

கிரைண்டர், மிக்சி, சைக்கிள், லேப் டாப் ஆகியவற்றை இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஏன் தண்ணீரை இலவசமாக கொடுக்கவில்லை. நாம் தமிழர் விமர்சிக்கிறோம் என்று சொன்னவுடன் இலவசம் என்ற சொல்லை எடுத்துவிட்டு விலையில்லா பொருள் என்ற வார்த்தையை போட்டுக்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். ஆகவேதான் மாற்றத்திற்காக தனித்து களத்தில் நிற்கிறோம். எங்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றும் பேசினார்.