அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி சென்னை ஆடிட்டரிடம் ரூ.50 லட்சம் மோசடி.!!

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார்.

அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அப்போது வெட்ரா கேப்பிட்டல்ஸ் என்ற வணிக நிறுவனத்தை மைக்கேல் என்பவர் நடத்தி வருவதாகவும், அவரது நிறுவனத்தில் முதலீட்டு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை முழுமையாக நம்பிய ஆடிட்டர் பவுன் குமார் பணத்தை முதலீடு செய்யவும் தயாரானார். அதன்படி சென்னையில் இருந்து திருச்சி வந்த அவர், நெம்பர் 1 டோல் கேட்டில் அலுவலகம் அமைத்துள்ள சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோரிடம் கடந்த 10.7.2019-ல் முதல் கட்டமாக ரூ.8.50 லட்சம் பணத்தை வழங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த தவணைகளில் ரூ.10 லட்சம், ரூ.32 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர். காலம் கடந்தும் அவர்கள் முதலீட்டு பணத்துக்கான வட்டி எதையும் வழங்கவில்லை.

மேலும் முதலில் கனிவாக பேசிய 2 பேரும் பின்னர் பவுன்குமாரை மிரட்ட தொடங்கினர். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவுன் குமார் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.தமிழகத்தில் பல்வேறு விதமாக மக்களிடையே மோசடிகள் சம்பவம் நடைபெற்று வருகிறது .குறிப்பாக பணத்தை இரட்டிப்பாக வழங்குகிறோம், ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்தால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும், என்று பலவிதமான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இவற்றை குறித்து பொது மக்களிடையே பல்வேறு கட்டமாக காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிலர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. ஆகையால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும். மேலும் தேவையற்ற ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தை எதிலும் முதலீடு செய்ய வேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.