கோட்டை ஈஸ்வரன் கோயில் தான் குறி… பின்னணியில் கோவை கார் வெடிப்பு வைத்து செய்த அரசியல் திட்டத்தை சொதப்பிய ஜேபி நட்டா பூஜை..

கோவை: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையத்தில் அதை தொடங்க இருந்த நிலையில், கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அவர் பூஜை செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால், டெல்லி பனிமூட்டத்தால் நட்டாவின் இந்த பயணம் தாமதமானதால் அவரால் கோட்டை ஈஸ்வரன் கோயில் செல்ல முடியவில்லை.

கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார்.

10 பேரிடம் கைமாறிய அந்த காரில் ஆணிகள், பால்ரஸ்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஜமேஷ் முபின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் விபத்தா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களிலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டது. இறந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரணை செய்யப்பட்டவர் என்பதால் இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கார் வெடிப்பை பயங்கரவாத தாக்குதல் என்று தமிழ்நாடு பாஜகவினர் விமர்சித்து வந்தார்கள். தமிழ்நாடு காவல்துறையை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். ஜமேஷா முபின் அங்குள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலையே குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தானர்.

அதே சமயம் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய ஜமாத்தினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்யவும் அனுமதி மறுத்தனர். தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி அவர்கள், கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று இந்து மத குருக்கள், கோயில் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் 2024 தேர்தலுக்கான பணிகளுக்கு ஆயத்தமாகி இருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம், பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வந்து உள்ளார். இன்று காலை கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், டெல்லியில் காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக அவரது தமிழ்நாடு பயணம் தாமதமானதால் இந்த பூஜையில் அவர் பங்கேற்க இயலவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதனால் கோவை கார் வெடிப்பை வைத்து பாஜக செய்த அரசியல் திட்டம் சொதப்பியதாக கூறப்படுகிறது.

இன்று காலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜகவினர் சாமி தரிசனம் செய்ததன் காரணமாக அப்பகுதியிலும், கோனியம்மன் கோவில் பகுதியிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் 50 க்கும் மேற்பட்ட புத்தக கடைகள் துணிக்கடைகள் அடைக்கப்பட்டன.