கோவையில் குண்டு வெடிக்கும்..கோவை, மே 23-கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், தற்போதைய தொண்டாமுத்தூர் எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. அதில் கோவையில் வெடிகுண்டு வைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், ரூ.1கோடி பணம் வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.
மேலும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:ஜூலை 30ம் தேதி முடிவதற்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம்.
எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் தான் இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். போலீஸ் டிபார்ட்மென்டில் கூட நம்ம ஆளுங்க இருக்கோம். உங்கிட்டா நிறைய கருப்பு பணம் இருக்கு. அதற்கான ஆதாரம்எங்களிடம் இருக்கு. ரூ.1 கோடி பைல வச்சு, நா சொல்ற இடத்துக்கு வந்து வச்சுடு. நீ வரலாம் இல்னா உன்னோட டிரைவர் வரலாம். பண்ப பையை பிற்பகல் 2.00 மணி முதல் 2.30 மணி வரை (25.05.2025) இடத்தில் வைக்கவும். நேரத்தை தவற விடாதீர்கள்.
சரியாக காளப்பட்டி வெள்ளாணைப்பட்டி ரோடுல கலிய பெருமாள் குட்டை கிட்ட குப்பை மேட்டுல பை வச்சுட்டு நீ போயிடலாம். என்னோட ஆளுங்க அந்த பையை எடுதுக்கு வாங்க உங்க பையில எந்த ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸையும் வச்சுக்காதீங்க. 3 நாட்களுக்குப் பிறகு, அதே பையில அதே இடத்துல உங்க ஈமேயில் ஐடியுடன் ஒரு ரகசிய குறியீட்டைப் பெறுவீர்கள்.
இப்படிச் செய்தால் எங்க பக்கத்துல இருந்து எந்தப் பிரச்னையும் வராது. இல்லைனா, நீங்க போலீசுக்குப் போனாலோ, எங்களைப் பிடிக்க முயற்சித்தாலோ உங்க குடும்பத்துல 3 பேரை 3 மாதங்களுக்குள் கொல்வோம்.
இது வெறும் மெசேஜ் இல்ல, இது எச்சரிக்கை.
இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.
மேலும், அதன் பின் பக்கத்தில் கூகுள் மேப் வரைபடம் ஒன்றும், அதில் “டிராப் தி பேக்” என்றும் எழுதப்பட்டிருந்தது.இதுகுறித்து புறநகர் கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளரும், அதிமுக மாநில துணைச் செயலாளருமான தாமோதரன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கடிதம் எங்கிருந்து வந்தது?. யார் அனுப்பினார்கள் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.1 கோடி கேட்டுஅதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு கொலை மிரட்டல்.
