உக்ரைனில் பின்வாங்கும் படைகள்… விளாடிமிர் புடின் எதிராக திரும்பும் ரஷ்யா..!

மாஸ்கோ: உக்ரைனில் அந்நாட்டு ராணுவத்திடம் தோற்று ரஷ்ய படைகள் பின்வாங்குவதால் அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக ரஷ்யாவில் அதிருப்தி நிலவுகிறது.

அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியது. ஒரு சில வாரத்தில் முடிந்து விடும் என கருதப்பட்ட இந்த போர், உக்ரைனின் உக்கிரமான பதிலடி தாக்குதலால் 6 மாதங்களாகியும் நீடித்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவதே இதற்கு காரணம். ஆரம்ப கட்டத்தில் பல பகுதிகளை கைப்பற்றி ரஷ்ய ராணுவம், தற்போது படிப்படியாக உக்ரைனின் தாக்குதலால் தோல்வியை சந்தித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த 20 ராணுவ நிலைகளை உக்ரைன் கைப்பற்றி உள்ளது. ரஷ்ய படைகள் எல்லை வரை விரட்டியடிக்கப்பட்டு உள்ளன. ரஷ்ய படையிடம் இருந்து 2000 சதுர கிலோ மீட்டர் பகுதியை மீட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய படைகள் தோற்பதால், அதிபர் புடினுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன. மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கோல்பினோவை சேர்ந்த 2 எதிர்க்கட்சிகள், புடின் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு உள்ளன. இதில், செயின்ட் பீட்டர் ஸ்பர்க்கை சேர்ந்த மேலும் ஒரு கட்சியும் இணைந்துள்ளது. இதனால், புடினுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.