நாட்டிலேயே முதன் முறையாக… சொந்தமாக ஆன்லைன் டாக்ஸி சேவை தொடங்கிய கேரள அரசு -ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வருகிறது!!

திருவனந்தபுரம் : முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அடுத்த மாதம் முதல் ஆன்லைன் டாக்சி சேவையில் களம் இறங்க உள்ளது.

நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரள அரசு சார்பில் இ – டாக்சி சேவை தொடங்கப்பட உள்ளது. கேரள சவாரி என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த டாக்சி சேவை ஆகஸ்ட் மாதம் முதல் அமலாகிறது. நாட்டின் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.

முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணத்திற்கு உறுதி அளிக்கும் விதத்தில் டாக்சி சேவை தொடங்கப்படுவதாக கேரள அரசு கூறியுள்ளது. கேரள அரசின் இ – டாக்சி முன்னோடி திட்டம் மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.இது குறித்து பேசிய மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டி,’இ – டாக்சி சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம். தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ-டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும்,’என்றார்.