லேசான அறிகுறிகளுடன் இந்தியாவில் ஐந்து வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோயா..? பரிசோதனை..!

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கான பரிசோதனை எடுக்கப்பட்டு இருக்கிறது.

சிறுமிக்கு உடல் முழுக்க எரிச்சல் மற்றும் தழும்புகள் தோன்றியதை அடுத்து குரங்கு அம்மை அறிகுறியாக இருக்கலாம் என கருதி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிறுமிக்கு வேறு எந்த உடல்நல கோளாறும் ஏற்படவில்லை, மேலும் இவர் கடந்த ஒரு மாத காலமாக வெளிநாட்டில் இருந்த வந்த யாரையும் சந்திக்கவில்லை.

இவருக்கு நடத்தப்பட்டு இருக்கும் பரிசோதனை முழுக்க முழுக்க தற்காப்புக்காகவே நடத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை இந்த சிறுமிக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், ஐரோப்பா மற்றும் இதர நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

உலகம் முழுக்க முப்பது நாடுகளை சேர்ந்த சுமார் 550-க்கும் அதிகமானோருக்கு இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் தான், உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவுவதை அடுத்து, உரிய வழிமுறைகளை பின்பற்ற உத்திர பிரதேச மாநிலத்தின் சுகாதார துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

கடந்த செவ்வாய் கிழமை அன்று மத்திய அரசு சார்பில் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் மத்திய அரசு வலியுறுத்தியது. இந்த நிலையில், தான் உத்திர பிரதேச மாநிலத்தில் சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

குரங்கு அம்மை நோய் அறிகுறிகள்:

குரங்கு அம்மை நோய் ஏற்படும் முன் கடுமையான காய்ச்சல், தசைவலி, உடல் சோர்வு, உடலில் நிணநீர் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும். மேலும் உடல் முழுக்க எரிச்சல் ஏற்படும். குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கி பழகும் போது தான், இது மற்றவர்களுக்கு பரவும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.