தமிழகத்தில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதால் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப் பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடை ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
இந்த தடைக்காலத்தில் தமிழக அளவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னைஉள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூர மிடப்பட்டிருக்கும்.இந்த இரண்டு மாதங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கப் பயன்படுத்திக் கொள்வார்கள். மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தவுடன் தமிழகத்தில் மீன்களின் விலையும் உயரத் தொடங்கும்.அதே சமயம், பாரம்பரிய மீன்பிடி படகுகளான பாய்மரப் படகு, நாட்டுப் படகு மற்றும் கட்டு மரங்கள் வழக்கம் போல கடலுக்குச் செல்லும்.
இதுகுறித்து, ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை சிறைகளில் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.
மேலும் சிலர் அதிகளவில் அபராதத் தொகை விதிக்கப்பட்டு கைதிகளாக உள்ளனர். இந்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.







