ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி… ஆந்திராவில் சூறைக்காற்றுடன கன மழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி, மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே கரையை கடந்தது.

புயல் கரையைக் கடந்தாலும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக மாறியது. அசானி எனப் பெயரிடப்பட்ட அப்புயல், வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து, ஆந்திரா கடல் பகுதியில் நிலைக்கொண்டது. இதனால் ஆந்திராவின் வடகடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அசானி புயல் காரணமாக செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது நாளாக நேற்றும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அசானி புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் துறைமுகம் மூடப்பட்டது.

மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் 7 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒடிசாவில் 17 குழுக்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 17 குழுக்கள் தயார் நிலையில் இருந்தன.

ஆர்பாட்டமாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி, மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.]