இந்திய தலைவா்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்.!!

அமெரிக்க தலைவா்களுக்கு இந்திய தலைவா்கள் அளித்த பரிசுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தலைவா்களுக்கு பிரதமா் மோடி மற்றும் பிற இந்திய அரசு அதிகாரிகள் அளித்த பரிசுகளின் விவரங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில், குறைந்தபட்சம் 480 டாலருக்கும் (சுமாா் ரூ.44,000) அதிகமான மதிப்பு கொண்ட பரிசுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலின்படி, 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபா் ஜோ பைடனுக்கு மரப்பெட்டி, கழுத்தில் அணியும் சால்வை, ஜாடியுடன் கூடிய குங்குமப்பூ, தேநீா் பெட்டி ஆகியவற்றைப் பிரதமா் மோடி பரிசளித்தாா். அவற்றின் மதிப்பு 562 டாலா் (சுமாா் ரூ.51,000).

2024-ஆம் ஆண்டு 7,750 டாலா் (சுமாா் ரூ.7 லட்சம்) மதிப்பு கொண்ட வெள்ளி உலோக ரயில் செட்டை பைடனுக்கு மோடி பரிசாக வழங்கினாா்.

2024-ஆம் ஆண்டு அந்நாட்டின் அப்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு 1,330 டாலா் (சுமாா் ரூ.1.22 லட்சம்) மதிப்பு கொண்ட கிருஷ்ண பரமாத்வாவின் ராசலீலா வெள்ளிப் பெட்டியைப் பிரதமா் மோடி வழங்கினாா்.

அதே ஆண்டு ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு 2,969 டாலா் (சுமாா் ரூ.2.72 லட்சம்) மதிப்பிலான பஷ்மினா சால்வையை பிரதமா் மோடி பரிசளித்தாா்.

2022-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வெண்கல நடராஜா் சிலையை பரிசளித்தாா். அதன் மதிப்பு 3,700 டாலா் (சுமாா் ரூ.3.40 லட்சம்).

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபா் பைடனுக்கு தேசிய பாதுகாப்பு விவகார உதவியாளராக இருந்த ஜேக் சல்லிவனுக்கு 599 டாலா் மதிப்பிலான காஷ்மீா் பஷ்மினா சால்வையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பரிசாக வழங்கியுள்ளாா்.