காந்தி நகர்: குஜராத்தில் இன்று நடக்கும் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு இதற்காக முறையாக அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் ஜி 20 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், எம்பிக்கள் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது.
மத்தியில் பாஜக அரசு இதுவரை எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை. அண்ணாமலை, அமித் ஷா, மோடி என்று யாருமே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை. ஆனால் சட்டப்படி இப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர்தான். அவரின் பதவிக்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. பொதுக்குழு முடிவிற்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்முறையாக டெல்லி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து உள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனால் மிகுந்த குஷியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அதிமுக – பாஜக மீண்டும் நெருங்கி வருகிறது. எல்லோரும் சுமுகமாக போகிறார்கள். ஓ பன்னீர்செல்வத்தை மட்டும் கழற்றிவிட போகிறார்கள் என்று விவாதங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில்தான் திடீர் என்று குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இன்று அவரின் பதவி ஏற்பு விழா குஜராத்தில் நடக்கிறது. பாஜக சார்பாக பிரம்மாண்டமாக இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு சென்றுள்ளது.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஓ பன்னீர்செல்வம் குஜராத் சென்றுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்லவில்லை. அவருக்கும் இதற்காக அழைப்பு சென்றுள்ளது. ஆனால் எடப்படியோ.. நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட சில அப்பாயிண்ட்மென்டுகள் காரணமாக குஜராத் வர முடியாது என்று கூறி பூபேந்திர படேலுக்கு வாழ்த்து கடிதம் மட்டும் அனுப்பி உள்ளார். இரண்டு தலைவர்களும் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் இருவரையும் பாஜக அழைத்ததாக கூறப்படுகிறது. இரண்டு பேருமே எங்களுக்கு முக்கியம். இரண்டு பேருமே பாஜகவிற்கு நெருக்கமான தலைவர்கள்தான் என்பதை உணர்த்தவே இப்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் இருக்கும் இடத்திற்கு செல்ல எடப்பாடி விரும்பவில்லை என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் கால் வைக்கும் அதே இடத்தில் இருக்க எடப்பாடி விரும்பவில்லை. அதோடு தன்னையும் – ஓ பன்னீர்செல்வத்தையயும் ஒன்றாக நடத்துவதையும் எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக மீது கோபம் கொண்டு எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply