ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : பணம் பட்டுவாடா புகாருக்கு வருமான வரித்துறையின் 24X7 கட்டுப்பாட்டு அறை திறப்பு ..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க வருமான வரித்துறையானது 24X7 கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசிநாள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிகவின் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்ற நிலையில் மொத்தம் 83 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் முழு வீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி (புலனாய்வுப் பிரிவு) தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி (புலனாய்வு) தலைமை இயக்குநரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களை இந்தக் கட்டுப்பாட்டு மையம் பெற்றுக்கொள்ளும். கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள வசதிகள்

கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 6669

தொலைநகரி எண் 044-2827 1915

மின்னஞ்சல் itcontrol.chn[at]gov[dot]in

வாட்ஸ் அப் எண் 94453 94453

இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பெருமளவிலான ரொக்கம், ஆபரணங்கள் மற்றும் இதர விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தாலோ, எடுத்துச்செல்லப்பட்டாலோ அதுபற்றிய தகவல்களை மேற்குறித்த தகவல் வழிமுறைகளை பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள வருமானவரி இயக்குநரகத்தின் (புலனாய்வுப்பிரிவு) அலகு-2ன் தேர்தல் செலவின கண்காணிப்புக்கான தொடர்பு அதிகாரி பி எஸ் சிவசங்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.