ஆபாச புகைப்படத்தை நீக்குவதாக கூறி கல்லூரி பேராசிரியையிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த என்ஜினியர் கைது..!

கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 32 வயது பெண் ஒருவர் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .அவருக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டது. உடனே அவர் செல்போன் செயலி மூலம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பேராசிரியையிடம் பலமுறை தொடர்பு கொண்டு கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர். ஆனாலும் அவர் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நிறுவன ஊழியர்கள் கல்லூரி பேராசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது .இதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை நீக்க வழி தெரியாமல் தவித்தார் .இந்த நிலையில் அவர் பணியாற்றி வரும் கல்லூரியில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது .இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த என்ஜினியர் அரவிந்த் (வயது 31) என்பவர் கலந்து கொண்டு சைபர் குற்றங்கள் தொடர்பாக பேசினார். அவரை சந்தித்த கல்லூரி பேராசிரியை தனக்கு நடந்த சம்பவத்தை கூறினார். அதற்கு அரவிந்த் சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது செய்யப்பட்ட ஆபாச புகைப்படத்தை எளிதாக நீக்கி விடலாம் ஆனால் அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார் .அதை நம்பிய பேராசிரியை எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக கூறினார். அதை தொடர்ந்து அவர் பேராசிரியையிடம் இருந்து ரூ.13 லட்சத்தை அரவிந்த் வாங்கினார் .ஆனால் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்திலிருந்து அவரால் நீக்க முடியவில்லை. இது பற்றி அவர் பேராசிரியையிடம் கூறினார். அதற்கு அவர் மீண்டும் முயற்சி செய்து நீக்குமாறு கூறியுள்ளார் .அதன் பிறகும் அவரால் அந்த புகைப்படத்தை நீக்க முடியவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பேராசிரியை கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை விரைவில் தந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேராசிரியை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து என்ஜினியர் அரவிந்தை நேற்று கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.