தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த நிலையில் திருவாரூரில் இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்கிறார் . இதற்காக முதல்வர் இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு வந்தார் . பின்னர் அவர் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக திருவாரூர் நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார் . இந்த வாகனத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தஞ்சாவூர் அருகே சாலியமங்கலம் நாலுரோடு பகுதியில் வாகனம் சென்றபோது அங்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் முதல்வரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் இருந்த பைகள் மற்றும் உடைமைகளை திறந்து சோதனையிட்டனர் . இந்தச் சோதனை ஓரிரு நிமிடம் நடைபெற்றது. வாகனத்தின் முன்சீட்டில் அமர்ந்து இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்தார் .தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்குப் பிறகு திருவாரூர் நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் சென்றது.





