தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையம் அடுத்தடுத்த எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது.
இதுதவிர இன்னும் சில எச்சரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் தொடர்பான புகார்களை சுவிதா செயலி மூலம் ஆன்லைனில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது தேர்தலோடு தொடர்புடைய எவரும் அரசு வாகனங்கள் அல்லது அரசு தங்கும் இடங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்; பொதுப் பணத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதற்கான தடை ஆகிய விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். தனியார் வீடுகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களோ அல்லது மறியலோ செய்யக்கூடாது. உ உரிமையாளரின் சம்மதம் இன்றி நிலம், கட்டிடங்கள் அல்லது சுவர்களைக் கொடிகள், பேனர்கள் அல்லது சுவரொட்டிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புகார்களைக் கண்காணிக்க கண்காணிப்பு நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அதனடிப்படையில் பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் எவரும் 1950 என்ற அழைப்பு மைய எண்ணைத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரி (DEO) / தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (RO) புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தடை உத்தரவுகளுக்குக் கட்டுப்படவும், ஒலிபெருக்கிகள் அல்லது இதர வசதிகளுக்கான அனுமதியைப் பெறவும், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து அரசியல் கட்சிகள் முன்னதாகவே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அமைச்சர்கள் தங்களின் அதிகாரப்பூர்வப் பணிகளைத் தேர்தல் பிரச்சாரத்துடன் இணைக்கக் கூடாது. தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காக அரசு இயந்திரம், போக்குவரத்து அல்லது பணியாளர்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் அனைத்து நிலை அதிகாரிகளும் பாரபட்சமின்றிச் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைத்துக் கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும் மற்றும் அரசு வசதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை நேர்மையாக முறைப்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கைப் பாதுகாத்து தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைத் தக்கவைக்க வேண்டும். 11. ECINET-ல் சுவிதா (SUVIDHA) தளம் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதன் மூலம் அரசியல் கட்சிகள் மைதானங்கள் மற்றும் ஹெலிபேடுகள் போன்ற பொது இடங்களைப் பயன்படுத்த விண்ணப்பிக்கலாம். இவை ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








