நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 243 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற இருக்கிறது.294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தில் மட்டும் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் மே 4ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. நடத்தை விதிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும், ஏப்ரல் 9ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், தேர்தல் நடைமுறைகள் மே 6ஆம் தேதியுடன் முடிவு பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், இது அனைத்து வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் மத்திய – மாநில அரசுகளுக்கும் பொருந்தும் எனவும் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அன்று பொறுப்பேற்றது. கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஆட்சி சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 15) நிறைவுக்கு வந்தது. மேலும் தேர்தல் தேதி அறிவிப்பால் தமிழக அரசின் அனைத்து நிர்வாக பொறுப்புகளும் தேர்தல் கமிஷனுக்கு சென்று விட்டன. தற்போதைய அரசு காபந்து அரசாக செயல்படும். அடுத்த அரசு பொறுப்பேற்கும் வரை இந்த காபந்து அரசு செயல்படும். இனி முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது .அவரவர் பயன்படுத்தி வரும் வாகனங்களை தலைமைச் செயலகத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும்.அதேபோல இனி தலைமைச் செயலகத்தில் வந்து அவர்கள் யாரும் ஆலோசனை நடத்த முடியாது. முக்கிய திட்டங்களை அறிவிக்கவும் முடியாது. ஏதேனும் மிக முக்கிய பிரச்சனை என்றால் மட்டுமே உயர் அதிகாரிகளை முதல் அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து கலந்தாலோசிக்கலாம், அதுவும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பெற்று தான் செயல்படவும் முடியும். நிதி ஒதுக்கீடுகளையும் அறிவிக்க முடியாது. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவோ அல்லது அரசு செலவில் விளம்பரங்கள் செய்யவோ அனுமதி இல்லை.தேர்தல் தேதி அறிவிப்பால் தலைமைச் செயலகத்தின் பிரதான நோட்டீஸ் பலகை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் உள்ள தலைவர்களின் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், கட்சியின் சின்னங்கள், உருவப் படங்கள் போன்றவை சாக்கினால் மூடப்பட்டன. எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் வருவாய்த்துறையினரால் சீலிட்டு மூடப்பட்டன. தேர்தல் முடியும் வரை அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது.அரசியல் கட்சிகள் மதம், சாதி அல்லது மொழி ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கக் கூடாது. மற்ற கட்சிகளை விமர்சிக்கும்போது தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, கொள்கை ரீதியான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும். குறிப்பாக, வழிபாட்டுத் தலங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவது ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான குற்றமாக கருதப்படும். பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேற்பட்ட ரொக்கத் தொகையை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி இத்தகைய தொகையை எடுத்துச் சென்றால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அரசாணைகள் வெளியிடுவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான சில முக்கிய அரசாணைகள் தேர்தல் தேதி அறிவித்த பிறகும் வெளியிடுவது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த செயல்பாட்டிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் குற்றம் சாட்டப்பட்டதால், கடந்த சில தேர்தல்களாக அரசு அதிக உயரதிகாரிகளுக்கு இதற்கான தனி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்து வருகிறது. அதன்படி மாநில அரசு செயல்படும் வரை பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் பட்டியலில் கோடு போட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிறப்பிக்கப்படும் அரசாணைகளின் விவரங்களை அந்த கோட்டிற்கு பிறகு சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பாக தலைமை தேர்தல் அதிகாரியை அணுகி ஆலோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






