இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன்!

கடந்த 2017ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இதில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் இது சம்பந்தமாக 2017&ம் ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை விசாரிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டி.டி.வி.தினகரனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற சுகேஷ் சந்திரசேகருக்கு 10 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாக புகார் எழுந்தது. இந்தநிலையில் டி.டி.வி.தினகரனுக்கு தற்போது அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.