தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு-அமைச்சர் சக்கரபாணியிடம் இருந்து ராதாகிருஷ்ணனுக்கு மாற்றம்..!

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு, அமைச்சர் சக்கரபாணியிடம் இருந்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக உணவுத் துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டிஎன்சிஎஸ்சி), தலைவராக கடந்த 2014 வரை கூட்டுறவு, உணவுத் துறை செயலர்கள் இருந்தனர். அதிமுக ஆட்சியில், இந்த பொறுப்பு செயலரிடம் இருந்து, அமைச்சராக இருந்த ஆர்.காமராஜுக்கு மாற்றப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகும் இந்த நடைமுறை மாறாமல், துறை அமைச்சர் சக்கரபாணி தலைவராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த அக்.21-ல்டிஎன்சிஎஸ்சி தலைவர் பொறுப்பை அமைச்சரிடம் இருந்து துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த ஜனவரியில் பொங்கலைமுன்னிட்டு அரசு வழங்கிய பரிசுத் தொகுப்பு தரமின்றி இருந்ததாக புகார் எழுந்தது. அதில் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த டிஎன்சிஎஸ்சி தலைவர் பொறுப்பு, அமைச்சரிடம் இருந்துதுறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெ.ராதாகிருஷ்ணன், சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியதுடன், 2004-ல் தஞ்சை ஆட்சியராக இருந்தபோது, கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தை நிதானமாக கையாண்டு பாராட்டு பெற்றவர். அதே ஆண்டு இறுதியில் சுனாமிதாக்கியபோது, நாகை மாவட்டத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர். சுனாமியில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை வளர்த்து வருகிறார். 2012-ல் சுகாதாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டார். 8 ஆண்டுகள் அப்பொறுப்பில் பணியாற்றிய அவர், கரோனா பேரிடரை சிறப்பாக கையாண்டு, பாராட்டப்பட்டார். கடந்த ஜூனில் கூட்டுறவு, உணவுத்துறை செயலராக நியமிக்கப்பட்ட பிறகு, அத்துறையிலும் பல புதிய மாற்றங்களை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.