தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால், இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விளையாட்டுத் துறையில் மாணவ – மாணவிகளை அவர் நிச்சயமாக மேம்படுத்துவார். ரூ.600 கோடி அளவில் சென்னையில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறுவ உள்ளார். தமிழகத்தின் தென் பகுதியான ராதாபுரம் தொகுதியிலும் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கத்தை அவர் தொடங்க உள்ளார்.
விளையாட்டுத் துறையை இந்த அரசு மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசுதான், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் அவர்களின் தொகுதியில் ஒரு மினி ஸ்டேடியத்தை அறிவித்து, விளையாட்டை ஊக்குவிக்கிறது. அதற்கு அமைச்சராக சரியான இளைஞர் கிடைத்துள்ளார். இளம் வயதிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தமிழகத்திற்கு கிடைத்திருப்பது பெருமைதான்.
வாரிசு அரசியல் பற்றி கேட்டால், கருணாநிதி முதல்வராக பதவிக்கு வரும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது என்றனர். அவர் மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகும் போதும் வாரிசு அரசியல் என்றுதான் கூறினர். இந்த இளம் வயதில் தனது குடும்ப வாழ்க்கையில் பல சந்தோஷங்கள், கனவுகளை விட்டுவிட்டு நாட்டுக்காக ஒருவர் உழைப்பதற்கு முன்வந்திருப்பது பெருமைக்குரியது. எனவே, உதயநிதியை குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.
Leave a Reply