திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மாநகரையும் தவெக தன்வசப்படுத்தியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசத்திடம் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி திருவெரும்பூர் தொகுதியில் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபரிடம் 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதேபோல், அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இங்கு முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் தவெக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் தாமோ.அன்பரசன் ஆலந்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் குமாரிடம் தோல்வியடைந்தார். அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி தொகுதியில் அமமுக வேட்பாளரிடம் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும், அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதியில் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். மதுரை கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளரிடம் பி. மூர்த்தி தோல்வி பெற்றார். சேலம் வடக்கு தொகுதியில் ராஜேந்திரன், காங்கேயம் தொகுதியில் அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் முத்துசாமி ஆகியோரும் தங்களது தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.






