திமுக அலுவலக திறப்பு விழா… டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் மோடி,அமித் ஷாவுடன் சந்திப்பு.!!

டெல்லி: டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இந்த பயணத்தில் இன்னொரு முக்கியமான அமைச்சர் ஒருவரையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.. ஏன் அந்த சந்திப்பு நடக்கிறது.. பிளான் என்ன என்று பார்க்கலாம்!

முதல்வர் ஸ்டாலின் தனது சர்வதேச பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். துபாய் , அபுதாபிக்கு பயணம் சென்றவர் சுமார் 6100 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்த நிலையில், தமிழ்நாடு வந்து சென்னையில் அமேசான் வளாகத்தை திறந்து வைத்தார்.

அதேபோல் சென்னையில் வெள்ள நீர் கால்வாய் கட்டுமானத்தையும் சோதனை செய்தார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லிக்கு பயணப்பட்டார். இன்று டெல்லியில் பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்கிறார்.

டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடக்க உள்ளது. திமுக சார்பாக திறக்கப்படும் இந்த கட்டிட விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இன்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினை அங்கு இருந்த திமுக எம்பிக்கள் வரவேற்றனர். அதிகாலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பல்வேறு சந்திப்புகளை நடத்த உள்ளார்.

பிற்பகலில் பிரதமர் மோடியை 1 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். இவர்கள் சுமார் 20 நிமிடம் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பின் மாலையில் 3.30 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இதற்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புதான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பொதுவாக டெல்லி செல்லும் போது பிரதமர் மட்டுமின்றி மற்ற அமைச்சர்களையும் சந்திப்பது வழக்கம். கடந்த டெல்லி பயணத்திலும் இதேபோல்தான் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அமைச்சர்களை சந்தித்தார். அப்போது கொரோனா காலம். ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலின் நிதின் கட்கரியை சந்திக்க வேறு காரணம். முன்னதாக தமிழ்நாடு பற்றி நிதின் கட்கரி வெளிப்படையாக புகார் அளித்து இருந்தார்.

அதில், தமிழ்நாட்டில் சாலைப் பணிகள் நடக்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. கேரளாவில் முதல்வர் எங்களுக்கு ஒத்துழைக்கிறார். ஆந்திரா, தெலுங்கானாவில் முதல்வர் எங்களுக்கு ஒத்துழைக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அந்த ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் சாலை பணிகள் பாதியில் நின்று உள்ளன. நிதி இருக்கிறது. கூடுதல் நிதி ஒதுக்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் அரசு முழு ஒத்துழைப்புதான் அளிக்கவில்லை என்று விமர்சனம் வைத்தார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் பதில் அளித்தார். அதில் நிதின் கட்கரி விமர்சனம் வியப்படைய வைக்கிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து சாலை பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று கூறினார். அதோடு இதற்கான பட்டியலையும் ஆதாரத்தோடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மோதல் இரண்டு தரப்பிற்கும் இடையில் லேசான கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்திக்க உள்ளார்.

இதில் டோல் கேட்கள் நீக்கம், சாலை பணிகளை வேகமாக செய்வது, தமிழ்நாடு – மத்திய அரசு சேர்ந்து அமைக்கும் சாலை பணிகள் 6 வழி சாலை திட்டங்கள் ஆகியவை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று கூறப்படுகிறது. அதோடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் பற்றியும் அவர் பேச உள்ளார். முன்னதாக விபத்தில்லா சாலைகள் அமைப்பதற்கு தமிழ்நாட்டு மாடலை செயல்படுத்தப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நிதின் கட்கரி பாராட்டி இருந்தார். இதை பற்றியும், தொப்பூர் இரண்டடுக்கு சாலை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேச இருக்கிறாராம்.