சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான அரசியல் நிலையில் திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் திமுக களத்தில் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
தேர்தலையொட்டி திமுகவில் 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கியது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்தார். இன்று தொடங்கி வருகிற 22 ஆம் தேதி வரை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (DMK Candidates Interview)முதல்கட்டமாக புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. தொகுதி நிலவரம், திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்தும் நேர்காணலில் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளை மார்ச் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும், நாளை மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
நாளை மறுநாள் மார்ச் 19 ஆம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது. மார்ச் 20 ஆம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.






