வடிவேலு காமெடியை விட ஐ.என்.டி.ஏ கூட்டணியில் திமுக இருப்பது பெரிய காமெடி – அண்ணாமலை விமர்சனம்..!

முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து பொதுக் கூட்டங்களில் பேசக்கூடாது எனவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியை விட ‘இந்தியா’ கூட்டணியில் திமுக இருப்பது பெரிய காமெடி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைப்பயணம் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். அவர் தனது நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் தொடங்கினார்.

இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 மற்றும் 16ம் தேதி இரண்டு நாள் நடைப்பயணம் மேற்கொண்டார் மூன்றாவது நாள் யாத்திரையாக நாகர்கோவில் அடுத்த பார்வதி புரம் சந்திப்பிலிருந்து அண்ணாமலை தனது யாத்திரையைத் துவக்கினார் அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து பொதுக் கூட்டங்களில் பேசக்கூடாது. அப்படிப் பேசும்போது துண்டு சீட்டு பறந்து விட்டால் இந்தியா என்ற கூட்டணியின் முழு விவரம் கூட ஸ்டாலினுக்கு தெரியாமல் போய்விடும். நகைச்சுவை நடிகர் வடிவேலு நகைச்சுவையை விட இந்தியா கூட்டணியில் திமுக இருப்பது பெரிய நகைச்சுவை.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் கடன் பெற்ற மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 11வது இடத்திலிருந்தது. இப்போது முதல் இடத்தில் இருக்கிறது ஒரு குடும்பத்திற்கு மூன்று லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. மொத்தமாகத் தமிழகம் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.

பிரதமர் மோடி சொன்னதை செய்யவில்லை என ராமேஸ்வரத்தில் ஸ்டாலின் சொல்கிறார். 208 கோடியில் தனுஷ்கோடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அந்த பணி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுகிறார்.

தனுஷ்கோடியில் புயல் வந்து பாலம் அழிந்தது. அதன் பிறகு அவர்கள் ஆறுமுறை ஆட்சிக்கு வந்தபிறகும் அவர்கள் பாலத்தைக் கட்டவில்லை. அதற்கு பிரதமர் மோடி தேவைப்பட்டார். தனுஷ்கோடி பகுதியில் கிராமங்களில் மின்சார வசதி கூட இல்லை. தனுஷ் கோடிக்கும், ராமேஸ்வரத்துக்கும் எதுவும் செய்யாத திமுக பிரதமரை குறை சொல்கிறது.

நாகர்கோவிலில் மேயர் மகேஷ் நடந்துகொள்வது போன்றுதான் திமுகவும் நடந்து வருகிறது. உலகத்தில் எந்த நாடாவது ரிமோட்டில் தேசிய கொடி ஏற்றியதை பார்த்திருக்கிறீர்களா. அமெரிக்கா அதிபர் கூட கையால்தான் அந்நாட்டு தேசிய கொடியை ஏற்றுவார். தேசிய கொடியை ரிமோட் மூலம் ஏற்றுகிறார் மேயர் மகேஷ். கொடியேற்ற கை வலித்தால் ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியது தானே.

தேசத்துக்கு எதிராக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் திமுகவினர். ஊழலுக்கு ஊற்றுக்கண் திமுக. யார் வந்தாலும் வாழ வைத்த தமிழகத்தை இப்போது வாழவைக்க உலக வங்கியில் இருந்து கடன் வாங்கும் நிலை உள்ளது டாஸ்மாக் வருவாயை 22 சதவீதம் அதிகரித்து காட்டியுள்ளது தி.மு.க

பிரதமர் மோடி தமிழகத்தில் 39 தொகுதிகளில் எதாவது ஒன்றுக்கோ வந்து விடுவாரோ என ஸ்டாலின் அச்சப்படுகிறார் நரேந்திர தத்தாவாக வந்த ஒருவரை சுவாமி விவேகானந்தராக மாற்றி அனுப்பியது குமரி மண் இங்கிருந்து மாற்றம் தொடங்கட்டும். இந்த நிகழ்ச்சிக்கு கொடி கட்ட காவல்துறை அனுமதிக்கவில்லை. கட்சியினர் போராடி தான் கொடி கட்டினர். காவல் துறையினர் இனி நியாயமாக நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.